வலைதளத்தில் இருக்கும் வசதிகள்

கேள்வி : புத்தக விற்பனை செய்யும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் வணிக இணைய தளங்கள் இருக்கும்போது நீங்கள் புத்தகத்திற்கென்று புதிதாக ஒரு மின் வணிக இணைய தளத்தை நிறுவ வேண்டியது அவசியமா? அதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது?

பதில் : புத்தகங்களை விற்க அமேசான் பொன்ற மின் வணிக இணைய தளங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நம் மெய்நிகர் புத்தகக் காட்சி மின் வணிக தளத்திற்கும் மற்ற மின் வணிக இணைய தளங்களுக்குமான செயல்பாடுகளில் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன.

அமேசான் போன்ற மின்வணிக இணைய தளங்களில் புத்தகங்களைப் பதிவேற்றுவதற்கும், புத்தகங்களின் இருப்பு குறித்த விவரங்களை பராமரிப்பதற்கும் தனியாக ஒருவரை நியமித்து அதைக் கவனித்து வர வேண்டும். அதைச் சரியாகச் செய்யத் தவறும்போது அபராதம் கட்ட வேண்டியோ புத்தகத்தை வலைதளத்திலிருந்து எடுக்க வேண்டியோ வரலாம்.

அமேசானில் பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் விற்பனைத் தொகை பலவிதமான மறைமுகச் செலவுகள் பிடித்தம் செய்யப்பட்ட பின்னர்தான் நமக்கு வரும். அந்தத் தொகைகள் எதற்காகப் பிடிக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொள்வது கடினம். ரூ. 100/=க்கும் குறைவான விலையுள்ள புத்தகங்கங்களை இவற்றில் விற்றால் நட்டம் ஏற்படும். அதனால் ரூ. 100/=க்கும் அதிக விலையுள்ள புத்தகங்களைத்தான் அங்கே பட்டியலிட வேண்டியிருக்கும்.

விற்பனைத்தொகை உடனே வராது.

அமேசானில் புத்தகங்களைப் பட்டியலிட்டிருப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

கேள்வி : இது ஒரு STATIC SITE / CATELOGING SITE தானே? இதை எப்படி மெய்நிகர் புத்தகக் காட்சி என்கிறீர்கள்?

பதில் : STATIC SITE / CATELOGING SITE – இல் வெறுமனே புத்தகங்களைப் பார்வையிடத்தான் முடியும். பணம் செலுத்தி வாங்கும் வசதியிருக்காது. வாடிக்கையாளர் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்கும் வசதியிருக்கும் கட்டண நுழைவாயில், (payment gateway option) ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்போது (integrate) அதை STATIC SITE என்று கூறமுடியாது.

கேள்வி : கொரானா பெருந்தொற்று காரணமாகப் புத்தகக் காட்சிகள் நடக்கமுடியாத சூழலில் மெய்நிகர் புத்தகக் காட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்தச் சூழல் மாறியபின் இதற்குத் தேவையிருக்காதே. அப்போது இதில் செய்யும் முதலீடு வீணாய்ப் போய்விடுமே?

பதில் : பணமதிப்பிழப்புக்குப் பிறகு மக்கள் எப்படிக் காகித வடிவப் பணப் பயன்பாட்டிலிருந்து கடன் அட்டைகள் மற்றும் பண அட்டைகள் பயன்பாட்டுக்கு அதாவது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் மாறிவிட்டார்களோ அதேபோல் இருந்த இடத்திலிருந்தே மின் வணிக தளங்களுக்குச் சென்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதை வசதியாகவும் உணர்கிறார்கள். அதனால் வருங்காலத்தில் இதன் பயன்பாடு அதிக அளவில் இருக்கும்.

புத்தகக் காட்சிக்குச் செல்ல இயலாதவர்கள், பல்வேறு காரணங்களால் அதைத் தவறவிட்டவர்கள் எதிர்காலத்தில் இந்த வசதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உலக அளவில் நடைபெறும் ஃபிராங்பட், இலண்டன், ஷார்ஜா, அபுதாபி புத்தகக் காட்சிகள், இந்திய அளவில் நடைபெறும் உலகத் தரத்திலான புத்தகக் காட்சிகளான புது டில்லி, கொல்கத்தா, பெங்களூர் புத்தகக் காட்சிகள், தமிழகத்தில் நடைபெறும் சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பெரிய புத்தகக் காட்சிகள் நடைபெறும்போது அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவலாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அந்த நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் வசிக்கக் கூடிய வாசகர்களின் தங்களால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை, புத்தகங்களை வாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தை இது தீர்க்கும். இருந்த இடத்திலிருந்தே அவர்கள் புத்தகங்களை வாங்க இந்த ஏற்பாடு வசதியாக இருக்கும்.

வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும் என்பதால் எப்போது நினைத்தாலும் புத்தகங்களை வாங்கலாம்.

அத்துடன் உலகின் எந்த மூலையில் புத்தகக் காட்சி நடந்தாலும் அது பற்றிய செய்திகள் இதில் இடம்பெறும். அதனால் மக்கள் வந்து பார்த்து வாங்கக்கூடிய வசதியுள்ள புத்தகக் காட்சிகளைப் பற்றி விளம்பரம் செய்து அங்கு மக்களை வரவழைப்பதற்கு இது மிகவும் உதவி செய்யும். புத்தகக் காட்சிகளில் எந்தெந்த நிறுவனங்கள் அரங்கு அமைத்திருக்கின்றன. அவர்கள் அரங்கு எண்கள் என்ன, அவர்களிடம் கிடைக்கும் புத்தகங்கள் என்னென்ன என்ற விவரங்களை பங்கேற்பாளர்கள் கொடுத்தால் அதை இடம்பெறச் செய்வோம். வாசகர்கள் வீட்டிலேயே தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டுபோய் வாங்கி வரலாம். இதனால் வாசகர்களின் நேரம் பெருமளவுக்கு மிச்சமாகும்.

பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் இவர்களுக்குப் பாலமாக இந்த அமைப்பு இருக்கும்.

கேள்வி : அமேசான் போன்றவற்றில் பணம் எதுவும் செலுத்தாமலேயே புத்தகங்களைப் பார்வைக்கு வைக்கலாம். அப்படியிருக்கும்போது கட்டணம் செலுத்தி புத்தகங்களைப் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் என்ன?

பதில்: தாங்கள் நினைப்பது தவறு. தங்கள் புத்தகங்களின் விற்பனைத் தொகையிலிருந்து அந்தப் புத்தகத்துக்கான பதிவுத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பிறகு மீதிப் பணம்தான் அனுப்பப்படுகிறது. இதுபோன்று பல மறைமுகச் செலவுகள் அமேசானிலும் மற்றவற்றிலும் உள்ளன. மெய்நிகர் புத்தகக் காட்சியில் இவை இல்லை.

அமேசானுக்கும் மெய்நிகர் புத்தகக் காட்சிக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன. அமேசானில் வானத்துக்குக் கீழே உள்ள அத்தனை நுகர்வோர் பொருள்களும் விற்கப்படுகின்றன. அதனால் வாசகர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் புத்தகத்திற்காக ஒருவர் செலவழிக்க நினைத்த தொகை வேறு ஏதாவது ஒரு பொருள் வாங்க செலவழித்துவிடக் கூடிய வாய்ப்பு அதிகம். அதனால் புத்தகம் வாங்குவதற்கு செலவழிக்கப்பட ஒருவர் நினைத்த தொகை கணிசமாகக் குறையும். புத்தக விற்பனை என்பது அமேசானைப் பொருத்தவரையில் ஒரு சிறு பகுதிதான். ஆனால் மெய்நிகர் புத்தகக் காட்சியில் அச்சுப் புத்தகம், மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என்று முழுவதுமே புத்தகம் விற்பனை மட்டுமே நடைபெறும். அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெறும். அதனால் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்குமே தனைத்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். அதற்குத் தேவையான கட்டண நுழைவு வாயில் வசதி (payment gateway option) ஒருங்கிணைப்பு (integration)இருக்கும். இந்த வசதிகளையெல்லாம் தாங்கள் தனியாகச் செய்வதென்றால் குறைந்தபட்சம் ரூ. 50,000/= செலவாகும். அதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது இந்தக் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதை உணர்வீர்கள்.

கேள்வி : இதில் சேர்ந்து என்னுடைய புத்தகங்கள் விற்பனையாகவில்லை யென்றால் எனக்கு இழப்புதானே?

பதில் : ஒரு தொழில் முயற்சியில் விற்பனையையும் லாபத்தையும் மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு ஒரு இறங்கும் மனப்பான்மை முதலில் தவிர்க்கப்பட வேண்டும். இது ஒரு முதலீடு என்ற கண்ணோட்டம் நம்மிடம் வளர வேண்டும். இதில் குறைந்த அளவு கட்டணமான ரூ. 3000/= கட்டணப் பிரிவில் தங்கள் வெளியீடுகளைப் பார்வைக்கு வைத்துள்ளீர்கள் என்று கொள்வோம்.

அடிப்படை மற்றும் அவசியத் தேவைகளை உள்ளடங்கிய மிக மிகச் சாதாரணமானதொரு வலைதளத்தை உருவாக்குவதற்கே குறைந்தது ரூ. 50,000/= வரை செலவாகும். தங்கள் முதலீடு ரூ. 3000/= மட்டும்தான் என்னும்போது ரூ. 47,000 லாபம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அது தவிர ரூ. 15000/= மதிப்புள்ள தங்கள் புத்தகங்கள் இங்கே விற்பனையாவதாகக் கொள்வோம். அதற்கு கழிவு 20% போக(அதிகபட்சமாக 40% வியாபாரக் கழிவு தரத் தாங்கள் தயார். அதில் 20% வாசகருக்குக் கொடுத்தது போக 20% தங்களுக்கு மிச்சமாகிறது என்பதாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.) தங்களுக்கு 20% ரூ. 3000/= (ரூ. 15000*20% = ரூ. 3000/=) கிடைக்கும். அப்போது தங்கள் முதலீடு திரும்பக் கிடைத்துவிடும்.

மேற்கண்ட பிரிவில் தாங்கள் பார்வைக்கு வைத்துள்ள 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 2 பிரதிகள்வீதம் 10 பத்திரிகைகளுக்கு விமர்சனத்திற்காகத் தருகிறீர்கள். அதன் விலை சராசரியாக ரூ. 50 எனக் கொள்வோம். அப்போது அதன் மதிப்பு 10*2*10*50 = ரூ. 10,000 ஆகிறது. அதன் தயாரிப்புச் செலவு 30% என வைத்துக் கொண்டால் ரூ. 3000 ஆகிறது(இதில் எத்தனை பத்திரிக்கைகளில் விமர்சனம் வெளிவரும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. அப்படியே வந்தாலும் எத்தனை பேர் கண்ணில் அது படும் என்பது தெரியாது. அதைத் தொடர்ந்து எத்தனை புத்தகங்கள் விற்கும் என்பதும் தெரியாது). அதைத்தான் தாங்கள் இங்கே கட்டணமாகச் செலுத்தப் போகிறீர்கள். இதை மாதிரியாக வைத்து ஒவ்வொரு பிரிவிற்கும் தாங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இதே 1500 தலைப்புகளுக்கான பிரிவில் ரூ. 50,000 செலுத்திச் சேர்ந்திருந்தீர்கள் என்றால் ஒரு ரூபாய்க்குக் கூடப் புத்தகங்கள் விற்கவில்லையென்றாலும் நட்டமில்லை. உண்மையில் தாங்கள் செலுத்தும் கட்டணம் முழுவதுமே ஒரு வலைதளத்தைக் கட்டமைக்க செலவழிக்கப்பட்டதற்கான ஒரு நல்ல முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இதைப் புரிந்து கொள்வீர்கள்.

அப்படியில்லையென்றாலும் கூட ரூ. 2,50,000/=க்குத் தங்கள் புத்தகங்கள் விற்றாலே அதிலிருந்து கிடைக்கும் 20% ரூ. 50,000 தங்கள் முதலீட்டை ஈடுகட்டிவிடும். (விற்பனை ஒரு வருட காலம் -அதாவது 365 நாள்கள். ஒவ்வொரு புத்தகக் காட்சியும் ஒரு மாத காலத்திற்கு என்று குறைந்தது 4 புத்தகக் காட்சிகளில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)

கொரானாப் பெருந்தொற்று காலத்தில் முன்னைவிட இணையம் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வாய்ப்பை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி : வருடம் முழுவதுமே மெய்நிகர் புத்தகக் காட்சியை நடத்தலாமே? அப்படியில்லாமல் குறிப்பிட்ட 4 மாதங்களில் மட்டும் மெய்நிகர் புத்தகக் காட்சியை நடத்துவது ஏன்?

பதில் : மெய்நிகர் புத்தகக் காட்சியின் முதன்மை நோக்கம் வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்துவது. பதிப்பாளர் – விற்பனையாளர் – வாசகர் இவர்களுக்கிடையே இணப்புப் பாலமாக இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில் செயல்படுவது. அத்துடன்…

1. வருட முழுவதும் புத்தகக் காட்சி என்பது சலிப்பைத் தரும்.

2. அடுத்த புத்தகக் காட்சிக்கான திட்டமிடுதலுக்கும், முந்தைய புத்தகக் காட்சியின்போது பெறப்பட்ட பின்னூட்டங்களைப் பரிசீலித்து மெய்நிகர் புத்தகக் காட்சிக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், புத்தகத் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபடுவதற்கும் இந்த இடைவெளியும் கால அவகாசகமும் அவசியம்.

3. இந்த இடைப்பட்ட நாள்களில் வாசகர்கள் விற்பனையாளர்களைத் தேடிச் சென்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கும் பழக்கம் ஏற்படும்.

4. ஒவ்வொரு புத்தகக்காட்சியின்போதும் புதிது புதிதாகப் புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் புதுப் புத்தகத் தயாரிப்புப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதற்கு பதிப்பாளர்களுக்கு இந்த இடைவெளி பயன்படும்.

5. வருட முழுவதும் நடக்கும்போது Payment Gateway போன்றவற்றின் செயல்பாடுகளைக் கவனிக்கப் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்காகும் செலவுகளை நம்மால் சமாளிக்க முடியாது. மெய்நிகர் புத்தகக் காட்சி நடக்கும்போது சிறப்புக் கழிவுகள் தரப்படுவதால் புத்தக விற்பனை அதிகமாக இருக்கும். அதனால் அந்த நேரங்களில் அவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள். அதற்காகும் செலவும் நியாயமானதாக இருக்கும். மற்ற நேரங்களில் கழிவு கிடைக்காது என்பதால் விற்பனை குறைவாக இருக்கும். அந்த மாதிரியான நேரங்களில் எவ்வளவு விற்பனையாகும், அதற்கு எவ்வளவு பேரைப் பணிக்கமர்த்த வேண்டியிருக்கும் என்பதைக் கணிப்பது சிரமம்.

6. ஹோஸ்டிங்(hosting) மற்றும் கட்டண நழைவாயில் பயன்பாடு(payment gateway option) இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான கட்டணம் இவற்றை புத்தகக் காட்சி நடைபெறும் நாட்களில் அதிகமாகப் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோமோ அதே அளவுக்குதான் விற்பனை குறைவாக உள்ள நாள்களில் பயன்படுத்தினாலும் செலுத்த வேண்டிவரும். அது நமக்கு வீண் செலவு. அதனாலும் இந்த இடைவெளி தேவைப்படுகிறது.

கேள்வி : அச்சுப் புத்தகங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் மின் மற்றும் ஒலிப் புத்தகங்கள் விற்பனைக்கு மெய்நிகர் புத்தகக் காட்சியில் இடமளித்திருக்கிறீர்கள். இதனால் அச்சுப் புத்தகங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படாதா?

பதில் : நாளுக்கு நாள் - ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் வாசிப்புப் பழக்கம், வாசிக்கும் புத்தகங்களின் வகை, புத்தகங்களின் பேசுபொருள் – உள்ளடக்கம், வடிவம் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உலக அளவில் எடுத்துக் கொண்டால் பொருளாதாரத்திலும், கல்வியிலும், தொழில் நுட்பத்திலும், நாகரிகத்திலும், வாசிப்புப் பழக்கத்திலும் முன்னேறிய நாடுகளில்கூட இன்னும் அச்சுப் புத்தகங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன.

இருந்தாலும் இதுவரை அச்சுப் புத்தகங்களை வாசித்து வந்தவர்களில் ஒரு பகுதியினர் கொஞ்சம் கொஞ்சமாக மின் புத்தகங்களையும் ஒலிப் புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவற்றின் பயன்பாடு ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே இருப்பதை மறுக்க முடியாது.

இதற்குக் கணினிப் பயன்பாடு அதிகரித்திருப்பதும், செல்லிடப்பேசிகளில் படிப்பதற்கு வசதியாகப் பல செயலிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதும், அதன் துல்லியம் மற்றும் தெளிவு படிப்பதற்கு சுகமானதொரு அனுபவத்தைத் தருவதும் ஒரு காரணம்.

செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்ல வசதியாகவும், இடத்தை அடைக்காததாகவும் இவை இருப்பது மற்றொரு காரணம்.

நிலையாக ஓரிடத்தில் இருந்து படிப்பவர்கள், நீண்ட ஓய்வில் இருப்பவர்கள் அச்சுப் புத்தகத்தையே விரும்புகிறார்கள். ஆனால் குறுகிய பயணத்தின்போது மின்புத்தகத்தையும், நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது ஒலிப்புத்தகத்தையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகின் ஒரு கோடியில் அச்சாகும் மின்புத்தகத்தை அதன் மறுகோடியிலுள்ள வாசகரிடம் கொண்டு சேர்க்க அதிக அளவு நேரமும், பணமும் செலவாகும். அந்த நிலையில் மின்புத்தகமாகவும், ஒலிப்புத்தகமாகவும் இருந்தால்தான் அதிக செலவில்லாமல் கொண்டு சேர்க்க முடியும்.

கொரானாப் பெருந்தொற்று பாதிப்பு போன்ற புத்தகக் காட்சிகள் நடத்தச் சாத்தியமில்லாத, புத்தக நிறுவனங்களுக்குச் சென்று புத்தகங்களை வாங்க இயலாத சூழலில் மின் புத்தகமும், ஒலிப் புத்தகமும்தான் வாசிப்பைச் சாத்தியமாக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக முன்னரே குறிப்பிட்டதுபோல் வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதுதான் நமது முதன்மை நோக்கம்.

கேள்வி : நான் தனியாக எனக்கே எனக்கென்று ஒரு வலைதளத்தை அமைத்துக் கொள்வதற்கு பதில் ஒரு வலைதளத்துக்குள் என் வலைதளத்தை அமைப்பதால் என் தனித்தன்மை பாதிக்கப்படாதா?

பதில் : முன்னரே குறிப்பிட்டதைப்போல இதில் உள்ள அத்தனை வசதிகளும் தங்கள் வலைதளத்தில் இருக்க வேண்டுமானால் லட்சக்கணக்கில் தாங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அத்துடன் அது பிரபலமாகப் பல வருடங்கள் ஆகும்.

நமது நோக்கம் ஒன்று – சிறு சிறு பதிப்பாளர்களும் பயனடைய நம்மாலானவரை உதவ வேண்டும் என்பது. இரண்டு – ஓரளவுக்கு இந்தத் தொழிலில் காலூன்றியுள்ளவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது.

ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு சிறு பதிப்பாளருக்கு வலை தளத்திற்காக ரூ. 50,000/= செலவு செய்வது சிரமம். அவர் ரூ. 50,000/=ஐ இதில் முதலீடு செய்வதற்குப் பதில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வது அவருக்கு இலாபகரமாக இருக்கும். எங்கள் கட்டண அட்டவணையையும், மற்ற விவரங்களையும் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

அத்துடன் மெய்நிகர் புத்தகக் காட்சியின் வலைதளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகம். அதன் காரணமாகப் பலரிடம் தங்கள் வெளியீடுகள் போய்ச் சேரும். தியாகராய நகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு விற்பனையகத்திற்கு வரும் கூட்டத்திற்கும் அதே பகுதியிலுள்ள ஒரு சிறிய தெருவிற்குள் இருக்கும் விற்பனையகத்திற்கு வரும் கூட்டத்திற்குமுள்ள வித்தியாசத்தை இதில் பார்க்கலாம்.

கேள்வி : புத்தகக் காட்சிகளில் வாசகர்களை நேரடியாகப் பார்த்துப் பேசமுடியும். அப்போது எங்கள் பணியைப் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களது பின்னூட்டங்கள் அடுத்து எந்த விதமான புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதில் முடிவெடுக்க உதவும். இதில் அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே?

பதில் : மெய்நிகர் புத்தகக் காட்சியில் வாசகர்களை நேரில் பார்த்துப் பேச முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும். அதன் மூலம் அவர்களது முகவரி, செல்லிடப்பேசி எண்கள் போன்ற தரவுகளும் தங்களுக்குக் கிடைக்கும். இதை வைத்து அவர்களிடம் தேவைப்படும்போது தொடர்பு கொள்ளவோ புதிய புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவோ செய்யலாம்.

கேள்வி : சாதாரணமாக நடக்கும் புத்தகக் காட்சிக்கும் மெய்நிகர் புத்தகக் காட்சிக்கும் என்ன வேறுபாடு? இதில் உள்ள கூடுதல் வசதிகள் என்ன?

1. வழக்கமான புத்தகக் காட்சிகளில் ஒரு வாசகர் நேரில் போய்த்தான் புத்தகங்களை வாங்க முடியும். மெய்நிகர் புத்தகக் காட்சியில் வாசகரால் இருந்த இடத்திலிருந்தே புத்தகங்களைத் தருவிக்க முடியும்.

2. வழக்கமான புத்தகக் காட்சிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் புத்தகங்களைப் பார்வையிட முடியும். மெய்நிகர் புத்தகக் காட்சியில் வருடம் 365 நாளும் 24 மணி நேரமும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பார்வையிடலாம். வாங்கலாம்.