அன்புள்ளம் கொண்ட பதிப்பாளத் தோழர்களுக்கு - வணக்கம்

பதிப்புலகில் இன்று நாம் சற்றும் எதிர்பாராத ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது.

மழை, வெள்ளம், சுனாமி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று பதிப்புலகுக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்துப் பல சோதனைகள். அவற்றிலிருந்து மீள்வதற்கு முன்னரே வேறொரு பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

கொரானாப் பெருந்தொற்றின் பாதிப்பால் உலக மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கை முறையையே அது பெரிதும் மாற்றிவிட்டது. அதனால் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பழக்க வழக்கங்களில் பெரும்பாலானவற்றைக் கைவிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொருவரும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். தொழில் நடைமுறைகள் & குறிப்பாகப் இதுவரைப் பின்பற்றப்பட்டு வந்த வேலை நேரங்கள், பொருட்களை வாங்கும் முறை, அவற்றைப் பயன்படுத்தும் முறை எல்லாமே மாறியிருக்கின்றன.

நம் துறையைப் பொருத்தவரை வாசிக்கும் முறையும் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இவை தொடருமா-? அல்லது இந்த நிலை தற்காலிகமானதுதானா என்பதைக் கணிக்க முடியவில்லை.

என்றாலும் புத்தகத் துறையில் பதிப்பாளர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கக்கூடிய புத்தகக் காட்சிகள் பழையபடி சமீபத்தில் நடப்பதற்கான சாத்தியமே இல்லை. கொரானாப் பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்து அது பரவாலாகப் பயன்பாட்டுக்கு வரும்வரை கூட்டம் சேர அரசு அனுமதிக்காது. மக்களும் புத்தகக் காட்சி போன்ற கூட்டம் அதிகம் சேரும் இடங்களுக்கு வருவதை அச்சம் காரணமாகத் தவிர்க்கவே செய்வார்கள்.

அதனால் நாம் விற்பனையில் பெரும் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்தச் சரிவிலிருந்து ஓரளவிற்காவது மீள்வதற்கான வழிகளைத் தேடி & உத்திகளை வகுத்து நாம் விரைவாக செயல்பட்டாக வேண்டும் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே உணர்ந்துள்ளோம்.

இந்த நிலையில் பதிப்பாளர்கள் அனைவருக்கும் பயன்தரும் & விற்பனையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். விற்பனை ஓரளவுக்காவது நடப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிச் சிந்தித்தோம்.

மக்களை இந்த அசாதாரண சூழல் இணையப் பயன்பாட்டை அதிக அளவில் சார்ந்திருக்கவும், அதைப் பெருமளவுக்குப் பயன்படுத்தவும், இலகுவாகக் கையாளவும் செய்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தி இருந்த இடத்திலிருந்தே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவர்கள் இப்போது நன்றாகப் பழக்கப்பட்டு விட்டார்கள். அத்தோடு அதை அவர்கள் பெரிதும் விரும்பவும் செய்கிறார்கள். வருங்காலத்தில் புத்தக விற்பனையின் கணிசமான பகுதி மற்ற பொருள்களின் விற்பனையைப் போலவே மின் வணிகம் வழியாகத்தான் நடக்கும் நன்பதைத் தாங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

இந்தச் சூழலைப் பதிப்பாளர்களாகிய நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வாசகர்கள் விரும்பும் & அவர்களுக்குப் புத்தகங்கள் சிரமமில்லாமல் இருக்கும் இடத்திலேயே கிடைப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பலவிதங்களில் அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவதுபோல் நிலைகுலைந்து இருந்த தடமே தெரியாமல் நாம் காணாமல் போய்விடுவோம்.

அதைத் தவிர்க்க நாம் எதிர்நீச்சல் போட்டேயாக வேண்டும். நாம் நம்மைத் தகுதியுள்ளவர்களாக, வலுவுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் அதிக அளவில் தொழில்நுட்பங்களை நம் துறையில் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும். புத்தக விற்பனையை தொழில் நுட்பத்தின் துணை கொண்டு, இணைய வழி செய்வதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.

ஆனால் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு, தொழில் முறை நேர்த்தியுடனும் உலகத் தரத்திலும் உள்ள ஒரு மின் வணிகத் தளத்தைத் தொழில் நுட்ப விற்பன்னர்களின் உதவியுடன் கட்டமைத்து வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆகும் செலவை ஒரு தனி மனிதனாலோ நிறுவனத்தாலோ ஒருசிலராலோ மட்டும் செய்ய முடியாது.

இதையெல்லாம் உணர்ந்து இந்தத் தொழில் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதற்கு நாம் நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலும் நன்றியுணர்ச்சியும் காரணமாக இதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். இத்துறையை மீட்டெடுப்பதற்கான இந்த முயற்சியில் எங்களுடன் கரம்கோர்த்து செயல்படத் தங்களையும் அழைக்கிறோம்.

இதனால் நாம் அனைவருமே பலன் பெறலாம். பதிப்பாளர் & விற்பனையாளர் & வாசகர் என அனைத்துத் தரப்பினருமே பயன்பெற வேண்டும் என்பதுதான் இதன் முதன்மையான நோக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்தால் தங்களுக்கே அது தெளிவாகத் தெரியும்.

முடிந்தவரை உலகத் தரத்திலான ஒரு மின் வணிகத் தளத்திலுள்ள எல்லா வசதிகளும் உள்ளவாறு இந்த மின் வணிக தளம் அமையுமாறு உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன், ஒரு புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு வெளியீட்டாளருடைய தனித் தன்மை தெரியும் வகையிலும் வசதிகள் இருக்கும் வகையில் இந்த வலைதளத்தை உருவாக்கும் பணிகள் எங்களால் மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடந்து வருகிறது. தாங்கள் தரும் ஆதரவைப் பொறுத்து இதில் இன்னும் பல வசதிகளை வருங்காலத்தில் செய்ய முடியும். நம் விற்பனையின் கணிசமான பகுதி இதன் மூலம் சாத்தியமாகும் என எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இதில் தங்கள் புத்தகங்களை இடம்பெறச் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் மிகவும் குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தாங்கள் செலவழிக்கும் தொகை நியாயமானது, பயனுள்ளது என்பதைத் தாங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.

யார் முதலில் & குறிப்பிட்ட நாள்களுக்குள் இத்திட்டத்தில் சேர்கிறார்களோ அவர்களுக்குக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். அதற்குப் பிறகு இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு இந்த சலுகைகள் இராது. அதனால் தாமதியாமல் இத் திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து இதை மேலும் மேம்படுத்துவதற்கான யோசனைகள் ஏதேனும் தங்களிடம் இருந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். சந்தேகங்கள் ஏதாவது ஏற்பட்டாலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும் தவறாமல் தயங்காமல் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள். உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். (பலர் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகப் பதிலளிப்பதால் நேரம் விரையமாகும். அதனால் மொத்தமாக பதிலளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் உங்கள் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம்.

புத்தகங்களைப் பதிவேற்றுவதில் தொழில் நுட்ப உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். அதற்கான குழுவைத் தங்களைத் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்கிறோம்.

வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுப்போம்.